தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், கட்- ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் தேர்வு
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TNPSC தேர்வுகள் மீண்டுமாக நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் TNPSC வருடாந்தர தேர்வு கால அட்டவணையின் படி குரூப் 2, 2A மற்றும் VAO, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் TNPSC போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு தற்பொழுது தான் சிந்தித்து கொண்டிருக்கும் சூழலில் தேர்வுகள் குறித்ததான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இதில் குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால், இந்த தேர்வுக்கு எப்போதும் அதிகளவு போட்டி காணப்படும். இந்த TNPSC குரூப் 4 தேர்வானது, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதன்மையானதாக கருதப்படுகிறது.
தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு:
VAO பதவிக்கு போட்டியிடும் பொதுப் பிரிவினருக்கு 21 – 30 வரையும், மற்ற வகுப்பினர்களுக்கு 40 வயது வரையும் வயது வரம்பு இருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுப் பிரிவினருக்கு 18 – 30 வரையும், மற்ற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் இருக்க வேண்டும்.
இதில் குறிப்பாக மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு மட்டுமே நடத்தப்படும்.
அந்த வகையில் மொத்தம் 200 வினாக்கள் அடங்கிய தேர்வில், ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.
2 பகுதிகளாக நடத்தப்படும் தேர்வில் வினாக்கள் அனைத்தும் Objective Typeல் கேட்கப்படும்.
பாடத்திட்டம்:
முதல் பகுதி மொழிப் பாடப்பிரிவில் தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
இதில் தேர்வர்கள், ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள தேர்வு முறை மாற்றங்களின் படி, தேர்வர்கள் கட்டாயமாக தமிழ் பாடப்பிரிவில் 45 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
இந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வர்களின் மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து பொது அறிவு பிரிவில், 100 வினாக்கள் கேட்கப்படும்.
இதில் 75 பொது அறிவு கேள்விகளும், 25 திறனறி கேள்விகளும் அடங்கும்.
இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும். இதில் தகுதியுடையவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
பொது அறிவியல் பிரிவில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை பொறுத்தளவு:
அறிவியல் பிரிவில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள்.
நடப்பு நிகழ்வுகளில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.
புவியியல் பிரிவில் புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.
வரலாறு பிரிவில், சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், தில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்
தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள்.
இந்திய அரசியல் பிரிவில், அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், மத்திய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து அமைப்பு.
பொருளாதார பிரிவில், ஐந்தாண்டு திட்டங்கள், நில சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி.
இந்திய தேசிய இயக்கம் – தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பங்கு ஆகியவை கேட்கப்படும்.
திறனறி வினாக்களை பொறுத்தளவு :
தர்க்க அறிவு (Reasoning), சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நஷ்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
கட் ஆப் மதிப்பெண்கள்:
இதில் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும்.
ஆனால் இத்தேர்வில் மதிப்பெண்கள் மட்டுமே தகுதியானது அல்ல.
அதனால் தேர்வர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண்களை பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
இந்த கட் ஆப் மதிப்பெண்களை உறுதியாக கூற முடியாது.
ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் 164 மதிப்பெண்களை எடுத்த பொதுப் பிரிவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் BC பிரிவில் -162, MBC பிரிவில் -162, BCM பிரிவில் -154, SC பிரிவில் -160, SCA பிரிவில் -155, ST பிரிவில் -156 மதிப்பெண்கள் சராசரியாக தேவைப்படும்.
இது தவிர பிரிவுகளை பொறுத்து இந்த கட் ஆப் மதிப்பெண்களும் வேறுபடும் என்பதையும் தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
0 Comments