தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. அதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இளைஞர்களிடையே கடும் போட்டி இருக்கும். ஆண்டுதோறும் TNPSC தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கு தேர்வர்கள் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. இதற்கான காரணம் இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி. கூடுதலாக, தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு எழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் உடனடி வேலை. மேலும் சொந்த மாவட்டத்திற்குள் வேலை கிடைக்க வாய்ப்பு.
இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, TNPSC வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். ஆனால் தற்போது வரை அறிவிப்பு வெளியாகததால், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனவே இந்த தேர்வு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.
என்னென்ன பதவிகள்?
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,
இளநிலை உதவியாளர் (Junior Assistant)
தட்டச்சர் (Typist)
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
வரித் தண்டலர் (Bill Collector)
நில அளவர் (Field Surveyor)
வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.
தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது.
வயதுத் தகுதி
இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.
அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.
மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை
இந்த பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டது. அவற்றிற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் (ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்) கிடைக்கும். இத்தேர்வில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் (அ) ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
0 Comments